கட்டுரை

இப்படி இருந்த காங்கிரஸ், இப்படி ஆயிடுச்சு!

செல்வன்

காங்கிரஸ் இல்லாத இந்தியா- இது நரேந்திரமோடியின் முக்கியமான 2014 தேர்தல் கோஷங்களில் ஒன்று. விடுதலை பெற்ற 67 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்திருக்கும் பெருமை பெற்ற காங்கிரஸ் கட்சி இன்று இருக்கும் நிலை பாஜகவின் தேர்தல் கோஷத்தை நனவாக்கிவிடும் என்ற சூழல்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன் வரலாற்றிலேயே மிகக்குறைவான இடங்களில் 44 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. ஆனால் இதுகூடப் பிரச்னை இல்லை. நிஜமான காங்கிரஸ் கட்சியின் சரிவைப் பார்க்கவேண்டுமானால் மாநிலங்களில் அதற்கு ஏற்பட்டிருக்கும் தோல்விகளைப் பார்க்கவேண்டும். சமீபத்தில் மகாராஷ்டிரா, ஹரியானா என இரண்டு மாநிலங்களை பாஜக விடம் பறிகொடுத்தபின் இந்த விஷயம் தேசிய அரங்கில் சூடாக விவாதிக்கப்படுகிறது.

காங்கிரஸ் இன்று நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் 9 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், ஆகியவற்றை விட்டால் மீதி இருக்கும் அருணாசலபிரதேசம், அஸ்ஸாம், ஹிமாசலபிரதேசம்,  மணிப்பூர்,  மிஜோராம், மேகாலயா ஆகியவை மலைப்பிரதேசங்கள். ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணிக்கட்சியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இவை தேசிய அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடியவை அல்ல. இந்த 9 மாநிலங்களிலிருப்பவை 88 நாடாளுமன்ற இடங்களே. இவற்றில் அதிகமாக வென்றதால்தான் தற்போதிருக்கும் 44 இடங்கள் கிடைத்தன. இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலத்தேர்தல்களிலும் காங்கிரசுக்கு வாய்ப்பு பிரகாசமாக இல்லை. மொத்தத்தில் பார்த்தால் கர்நாடகா மட்டும்தான் காங்கிரஸ் கையில் இருக்கும் ஒரே பெரிய மாநிலம். மத்தியில் 44 இடங்கள், பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி இழப்பு- இதெல்லாம் சேர்ந்து காங்கிரஸ் கட்சி மெல்ல தனக்கான இடத்தை இந்திய அரசியலில் இழந்துவருவதாகச் சொல்லலாம் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

மாறாக காங்கிரசுடன் ஒப்பிடும்போது நாட்டின் மிகமுக்கியமான மாநிலங்கள் அனைத்தும் பாஜக வசம் உள்ளன.  குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய பெரிய மாநிலங்கள் தவிர்த்து ஹரியானா, கோவா,சத்திஸ்கர் போன்ற மாநிலங்கள் பாஜகவிடம் உள்ளன. மகாராஷ்டிராவும் ஹரியானாவும் பொருளாதார பலம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத் தில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகமான இடங்களை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றது. அங்கு சமாஜ்வாடி கட்சியை விட அடுத்த தேர்தலில் பாஜக வெல்ல வாய்ப்புகள் அதிகம். டெல்லியும் மீண்டும் தேர்தல் நடக்கையில் பாஜக கையில் வந்துவிடும் என்கிறார்கள்.

1984-ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின் ராஜிவ் காந்தி பிரதமர் ஆனார். அப்போது வந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 404 இடங்கள் வென்று பெரும் சாதனை படைத்தது. அதன்பின்னர் காங்கிரஸ்  மத்தியில் வென்ற இடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மாநிலங்கள் பல அதன் கையில் இருந்தன.

உதாரணத்துக்கு எப்போதும் தென்மாநிலங்கள் காங்கிரஸுக்குக் கைகொடுப்பவை. ஆந்திரப்பிரதேசம் காங்கிரசுக்கு எப்போதும் கைகொடுத்து வந்தது.  ஆனால் இப்போது மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது, ஜெகன்மோகன் ரெட்டி தனிக்கட்சி ஆரம்பித்தது ஆகியவற்றால் அங்கு காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் செல்வாக்கு இழந்து இருந்தாலும் கூட்டணி சேர்ந்து ஓரளவுக்கு இடங்களைப் பெறும். ஆனால் இப்போது அக்கட்சியுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராகவே இல்லை.

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு தேர்தல் ஒரு திருப்புமுனை. அதற்கு முந்தைய இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது. (ஒரிசாவிலும் கேரளாவிலும் சில காலம் மட்டும் காங்கிரஸ் பதவியில் இல்லை) அந்த ஆண்டு நடந்த 16 மாநிலங்களின் தேர்தல்களில் எட்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடிந்தது. தமிழ்நாடு, ஒரிசா, கேரளம், மேற்குவங்கம், பீஹார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி அமைத்தன. மீதி மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை. எனவே கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அன்று ஆரம்பித்த சரிவு இன்றைக்கு சோனியாவின் தலைமையில், ராகுல்காந்தியின் காலத்தில் இன்னொரு கட்டத்தை எட்டி உள்ளது. எமர்ஜென்சிக்குப் பின்னாலோ போபர்ஸ் பிரச்னைக்குப் பின்னாலோ கூட காங்கிரஸின் நிலைமை  மாநிலங்களில் இவ்வளவு சீரியசாக இல்லை.

1996-க்குப் பின்னால் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களைப் பார்த்தால் காங்கிரஸ் பெற்ற இடங்கள் குறைவாகவே இருக்கின்றன. 140(1996), 141(1998), 114(1999), 145(2004), 206(2009), 44(2014). கடந்த இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் தொடர்ந்து வீழ்ந்துகொண்டிருப்பதை உணரமுடியும்.

“மாநிலங்களில் ஆட்சி இழப்பது என்பது உள்ளூர் பிரச்னைகளாலும் தொடர்ந்து பத்தாண்டுகளாக ஆட்சியில் இருப்பதாலும் நிகழ்வது. ஹரியானா, மஹாராஷ்டிராவில் பத்தாண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் காங்கிரஸ் இருந்ததால் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். எனவே ஆட்சியை இழந்தோம்” காங்கிரஸ்காரர்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் குஜராத்தில், மத்தியபிரதேசத்தில், சத்திஸ்கரில் ஏன் 15 ஆண்டுகளாக  பாஜகவே ஆட்சி செய்யமுடிகிறது? என்ற கேள்வியும் காங்கிரஸும் கூட எத்தனையோ மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சி செய்யும் வாய்ப்பை முன்பு பெற்றதுதானே? இப்போதுமட்டும் ஆட்சி  மாற்றத்தை மக்கள் விரும்பக் காரணம் என்ன? என்று கேட்கப்படுகிறது.

பாஜகவுக்கு இந்தியாவின் கிழக்குப் பகுதியும் தெற்குப் பகுதியும் பலவீனமாக உள்ளன. தெற்கே இருக்கும் ஆந்திரா(பாஜக இங்கே தெலுங்குதேசத்துக்கு ஆதரவளிக்கும் கூட்டணிக்கட்சிதான்), தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லை. மேற்குவங்கம், பிஹார், ஒரிசா போன்ற மாநிலங்களிலும் பாஜக இல்லை.  வடகிழக்குப் பிராந்தியங்களில் இல்லவே இல்லை. இப்போது பாஜக ஒன்பது மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. 2017-ல் உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலில் கவனம் குவிப்பதற்கு முன்னால் பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் கடுமையாக முயற்சி செய்யும். 2016-ல் தமிழ்நாடு தேர்தல் வேறு வருகிறது. இங்கே என்னமாதிரி முயற்சியை பாஜக எடுக்கும் என்பது இன்னும் நிச்சயமாகத் தெரியாவிட்டாலும் ஜெயலலிதாவின் வழக்கு நிலவரத்தைப் பொறுத்து பாஜகவின் திட்டம் தீட்டப்படும்.

 காங்கிரசில் ராகுல்காந்தி பத்தாண்டுகளாக அரசியல் அனுபவம் பெற்றிருந்தாலும் முனைப்புடன் முன்வந்து செயல்படுவதாகத் தெரியவில்லை. மகராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் பிரதமர் மோடி 35 கூட்டங்களில் பேசினார். ஆனால் இளைஞரான ராகுல்காந்தி பத்து கூட்டங்கள் கூடப்பேசவில்லை.

“அவசரப்பட்டு காங்கிரசுக்கு இப்போதே அஞ்சலி எழுதிவிடவேண்டாம். 1998-ல் சோனியாகாந்தி காங்கிரசுக்குத்தலைமை ஏற்றபோது காங்கிரஸ் நான்கு மாநிலங்களில்தான் ஆட்சியிலிருந்தது. இது 2004-ல் 17 மாநிலங்களாக உயர்ந்தது. உள்ளூர் பிரச்னைகளால் மாநிலங்களில் ஆட்சிகள் மாறியிருக்கும். ஆனால் அரசியல்சூழல் மாறும்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேசிய ஊடகங்களில் பேசவல்ல குழு உறுப்பினரான ஜோதிமணி.

காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பிக்க ராகுல்காந்தி திட்டங்கள் வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செயல்படுத்துவதற்குள் பாஜக மிகமுக்கியமான மாநிலங்கள் பலவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும்.

காங்கிரஸ் கட்சிக்குள் நிர்வாக ரீதியான மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியை மறுகட்டமைப்பு செய்தால் ஒழிய கட்சியின் வளர்ச்சி சாத்தியமில்லை. மாநில அளவில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை உட்கட்சித் தேர்தல்மூலம் தெரிவுசெய்து அவர்களைப் பணியாற்ற விடுவதும் அதில் ஒன்று. ஆனால் இதெல்லாம் எப்போது?

நவம்பர், 2014.